மதுரை: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இவ்வாண்டுக் கான பிளஸ்-2 தேர்வு முடிவு 2 வாரங்களுக்கு முன்பாக வெளியானது. இதற்கு முன்னதாகவே பெரும்பாலான அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் இளங்கலை, இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை கல்லூரி நிர்வாகங்கள் பெற்றன.
ஆனால், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பிறகு அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜூலை 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்நிலையில் பிளஸ்-2 மத்திய பாடப்பிரிவுக்கான (சிபிஎஸ்இ) தேர்வு முடிவு தாமதத்தால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. தற்போது அது மேலும் நீடிக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் தேவை என பல்கலைக்கழக மானியக் குழுவும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தி லுள்ள பெரும்பாலான அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளில் சுமார் 90 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் தொடங்க தயாராகி விட்டன. அரசுக் கல்லூரிகளில் இன்னும் கலந்தாய்வு தொடங்கவில்லை. சிபிஎஸ்இ தேர்வு முடிவுக்குப் பிறகே கலந்தாய்வு தொடங்கும் எனத் தெரிகிறது. இதுபோன்ற சூழலில் பிற அரசு உதவி பெறும், தனியார் கல்லூரி களில் சிபிஎஸ்இ பிரிவு மாணவர்கள் சேருவதற்கு சிக்கல் ஏற்படும் என பெற்றோர் கருதுகின்றனர்.
இது தொடர்பாக அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கூறுகையில், ‘‘பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தாமதித்தால் சேர்க்கை குறையலாம் என்பதால் முன்கூட்டியே சேர்க்கையை தொடங்குகின்றனர். இந்த முறை சிபிஎஸ்இ முடிவுகள் தாமதத்தால் சில இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன.
கடந்த கல்வியாண்டில் தாமதமாக வகுப்புகள் தொடங்கியதால் சில கல்லூரிகளில் ஜூலை வரை தேர்வு நீடித்தது. இதனைத் தவிர்க்க, இந்த ஆண்டு முன்கூட்டியே வகுப்புகளை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவால் தள்ளிப் போகிறது’’ என்றார்.