தமிழகம்

கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்கள் ஜாதி, மத அடையாளங்களுடன் வருவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வேலூர்: பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஜாதி, மத அடை யாளங்களுடன் வருவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட நினைவிடங்கள் தியாகச் சின்னங் களுக்கு சென்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.

இதனையொட்டி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வேலூர் கோட்டைக்கு நேற்று வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தியாகச் சின்னங்களை பார்வையிட்டு மரியாதை செலுத்தி வருகிறோம். ஆனால், காவல் துறையினர் இதற்கு தடை விதிக்கின்றனர். இதனை நீக்க வேண்டும்.

எனது வாகனத்தில் எழுதப்பட்ட வாசகங் களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கிறோம். எனது சொந்த வாகனத்தில் எழுதப்பட்ட வாசகத்தை மறைப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும்.

தமிழக முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று(நேற்று) நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. அவர் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் ஜாதி, மதத்தை ஒழிப்பதற்காக சீருடை கொண்டு வரப்பட்டது. மேலும், இலவச உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் தற்போது அரசுப் பள்ளிகளில் ஜாதி, மத, சின்னங்களோடு மாணவர்கள் வருகின்றனர்.

வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாளங்களோடு மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.

அது போன்ற ஜாதி, மத சின்னங்கள் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக தற்போது புதிய விதிமுறைகளை அரசு கொண்டு வந்துள்ளது. இதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறேது. மதம் அடிப்படையில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT