சென்னை: மாநிலக் கல்வி கொள்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறையைப் பார்ப்போம்.
தமிழ்நாடு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவானது ஓராண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை தயார் செய்து இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான அனைத்து தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் stateeducationpolicy@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும், சென்டர் பார் எக்லன்ஸ் கட்டிடம், 3-வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600025 என்ற முகவரிக்கும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.