தமிழகம்

மாற்று அரசியலை முன்னிறுத்தும் போராட்டம் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன் உறுதி

செய்திப்பிரிவு

மாற்று அரசியலுக்கு ஆதரவான சக்திகளை அணி திரட்டவும், மக்களின் நம்பிக்கையை பெறவும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் சுமார் 50 ஆண்டு காலமாக தொடரும் திமுக, அதிமுக எனும் இரு துருவ அரசியலையும், ஆட்சியையும் நிராகரித்து மாற்று அரசியல் மாற்றத்திற்கான அணிக்கு வாக்களிக்க தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா அணி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது.

ஆனால், தமிழக தேர்தல் முடிவுகள் மாற்று அணிக்கு ஆதரவாக அமையவில்லை. எங்கள் அணிக்கு வாக்களித்த மக்களுக்கும், அயராது தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

ஊழலும், பணநாயகமும் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக அரசியலுக்கான கொள்கைகளையும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வையும் முன்னிறுத்தி மக்களின் ஆதரவை பெறுவதற்கு மாறாக அனைத்து தொகுதிகளிலும் திமுக, அதிமுக இரு கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தன.

அரவக்குறிச்சியில் கோடிக்கணக்கில் கள்ளப்பணம் கைப்பற்றப்பட்டு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக தஞ்சை தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களிலும் இதுபோல் இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் தேர்தல் கமிஷனால் கைப்பற்றப்பட்டுள்ளது.

திமுக, அதிமுகவின் பணபலத்தை, பணப்பட்டுவாடாவை முறியடித்து மக்கள் நலக்கூட்டணி அணி தேர்தலில் மக்களின் ஆதரவை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சி தலைமைகளின் ஊழல் மற்றும் சமூகப்பொருளாதார கொள்கை மீது நாங்கள் முன்வைத்த விமர்சனம் தொடர்கிறது.

எனினும், ஊழல் - மது - சாதி ஆணவ கொலைகளில்லாத தமிழகம்; அனைவருக்கும் இலவசக் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதார வசதி, மருத்துவ வசதி, குடியிருப்பு வசதி - மனைப்பட்டா ஆகியவற்றை உறுதிப்படுத்தும் தமிழகம்; கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மக்கள், விளிம்புநிலை மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவது; விவசாயத்தையும் தொழிலையும் வளர்த்தெடுப்பது போன்ற மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட மாற்று அரசியலுக்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

மாற்று அரசியலுக்கு ஆதரவான சக்திகளை அணி திரட்டவும், மக்களின் நம்பிக்கையை பெறவும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது.

மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கைகளினால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினை மற்றும் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலுவான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுயேட்சையாகவும், கூட்டணி கட்சிகளோடு இணைந்தும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT