சென்னை: மாநகராட்சியின் 16 சமுதாய நல மையங்களில் பொதுமக்கள் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை பெற மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 140 ஆரம்பசுகாதார நிலையங்கள், 16 சமுதாயநல மையங்கள், 24 மணி நேரமும்இயங்கும் 3 மகப்பேறு மருத்துவமனைகள், 6 ரத்தச் சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் ஒரு தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
16 சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு சம்பந்தமான சிகிச்சை அளிக்க 42 சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.
கடந்த மாதம் 23-ம் தேதி முதல்ஜூலை 7-ம் தேதி வரை இரு வாரங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 6 ஆயிரத்து 891 புறநோயாளிகள் என மொத்தம் 89 ஆயிரத்து 580 புற நோயாளிகள் இங்கு சிசிக்சை பெற்றுள்ளனர். மேலும் 8 ஆயிரத்து 427 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். 275 பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும், 522 பேருக்கு மகப்பேறு சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, மாநகராட்சியின் சார்பில் செயல்படும் சமுதாய நல மையங்களில் பொதுமக்கள் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.