தாம்பரம் மாநகராட்சி ஆதிதிராவிட நலத்துறை பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை தாம்பரம் மேயர் வசந்தகுமாரியிடம் வழங்கும் எம்பி. டி.ஆர். பாலு. உடன் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா. 
தமிழகம்

தாம்பரம் மாநகராட்சி ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில்: கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.50 லட்சம் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் கடப்பேரியில் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் தற்போது 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் பலர் தனியார் பள்ளியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாநகராட்சி மேயரும் அப்பள்ளியின் முன்னாள் மாணவியுமான வசந்தகுமாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதை அறிந்த ஸ்ரீபெரும்புதூர் எம்பி. டி.ஆர்பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் நிதியை, பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்ட ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை மேயர் வசந்தகுமாரியிடம் வழங்கினார்.

இது குறித்து மேயர் கூறியதாவது: நான் பயின்ற பள்ளிஎன்பதால் பள்ளியை மேம்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். மேலும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இது தொடர்பாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்தகோரிக்கையை ஏற்று எம்பி ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேலும் ஆக்கிரமிப்பில் இருந்த 97 சென்ட் மீட்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் கூடுதல் வகுப்பறை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து, ஆதிதிராவிடர் நலத் துறையிடமிருந்து கூடுதல் நிதி பெற்று, தனியார் பள்ளிக்கு நிகராக இப்பள்ளியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT