கரூரில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட, அதிமுக பிரமுகர் அன்புநாதன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்புநாதன்(47). அதிமுக பிரமுகரான இவரது வீடு மற்றும் கிடங்கில் ஏப்ரல் 22-ம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.5 கோடி ரொக்கம், 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டு கண்டறியும் கருவி, 4 கார்கள், இந்திய அரசு சின்னம் எழுதப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
ஜாமீன் பெற்றார்
மத்திய அரசின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தியதாக, அன்புநாதன் மீது வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 5-ம் தேதி அன்புநாதன் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே மண்மங்கலம் வட்டாட்சியர் அம்பாயிரநாதன் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில், அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்தி ருந்ததாக, அவர் மீது வேலாயுதம்பாளையம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்தனர்.