மதுரையில் டாஸ்மாக் கடைகள் விற்பனை நேரம் 2 மணி நேரம் குறைப்பால் விற்பனையில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
புதிதாகப் பதவியேற்ற தமிழக அரசு, டாஸ்மாக் கடைகள் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் குறைத்தது. அதனால், காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய மதுவிற்பனை பிற்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 306 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் ஒரு நாளைக்கு, சராசரியாக ரூ. 2.25 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. நேற்று விற்பனை நேரம் குறைக்கப்பட்டது தெரியாமல் பல கடைகள் முன், வழக்கம்போல காலை 10 மணிக்கே மது பாட்டில்கள் வாங்க குவிந்தனர். கடை திறக்கப்படாததால் திறக்கும் வரை காத்திருந்திருந்தனர். சில கடைகள் முன் திறந்தபின், வழக்கம்போல மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
2 மணி நேரம் நேரம் குறைப்பால் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் டாஸ்மாக் கடைகள் விற்பனை நேரம் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை இருந்தது. 2006-ம் ஆண்டில் காலை 2 மணி நேரமும், இரவு 2 மணி நேரமும் மொத்தம் 4 மணி நேரம் குறைத்து காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டது. ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அதிகரித்தே வந்தது. தற்போது ஆண்டிற்கு ரூ. 25,580 கோடி வருமானம் கிடைக்கிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை வெறும் ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே மது விற்பனையாகும். ‘பீக் அவர்' ஆன மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையே விற்பனை மிக அதிகளவில் இருக்கும் என்றனர்.
டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட் டபோது, முதல் நாள் விற்பனை விவரத்தை கண்டறிய முடியவில்லை. நாளைக்குத்தான் (இன்று) விற்பனை நிலவரம் தெரியவரும் என்றனர். மது வாங்க வந்தவர்களிடம் கேட்டபோது, விற்பனை நேரத்தை குறைத்ததை வரவேற்கிறோம். எங்கள் உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குடிப் பழக்கத்தைக் கைவிட நாங்களும் முயற்சி செய்கிறோம். ஆனால் முடியவில்லை என்றனர்.