தமிழகம்

நிர்வாகிகள் 15 பேருக்கு புதிய பொறுப்புகள்: அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவில் 15 நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடும் சட்டப் போராட்டங்களுக்கு நடுவே அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். இப்பதவியை இபிஎஸ் பெற, முன்னாள் அமைச்சர்கள் பலர்உறுதுணையாக இருந்தனர். இந்நிலையில், அவர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு புதிய பதவிகளை இபிஎஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிவிப்பில்,‘‘கட்சி அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர், இன்று முதல் அவரவர்வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, சி.வி.சண்முகம், ப.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் சி.ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பா.பெஞ்சமின், வி.வி.ராஜன் செல்லப்பா, நா.பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

கட்சிப் பொருளாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் வகித்துவந்த நிலையில், அவர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதால், திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர்பதவி வழங்கி இபிஎஸ் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT