தமிழகம்

டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை படிப்படியாக குறைத்திடுக: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

மதுக்கடைகள் திறக்கும் நேரம் பகல் 12 மணிக்கு என்பதை படிப்படியாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம், பிறகு 4 மணி நேரம் எனக் குறைத்துக் கொண்டே போக வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே 5 கோப்புகளில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். மக்கள் நலன் கருதி சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து, கட்டணமின்றி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம், தாலிக்கு 8 கிராம் தங்கம், கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமின்றி 200 யூனிட் மின்சாரம், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட் ஆக உயர்த்தி வழங்குவது போன்றவற்றை வரவேற்கிறோம். அத்தகைய நல்ல பணிகளுக்கு எங்களுடைய ஆதரவு என்றைக்கும் உண்டு.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சி, இயற்கைச் சீற்றம், கனமழை, வெள்ளம் போன்ற பல்வேறு காரணங்களால் வேளாண் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் சிறு, குறு விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்பதன் தொடர்ச்சியாக மற்ற சுமார் 2 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய விவசாயக்கடனையும் அரசு உடனே முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்.

அதே போல தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழக விவசாயிகள் சுமார் 78.5 லட்சம் பேர் வாங்கிய விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்திட தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்; இல்லையெனில் அத்தகைய விவசாயக் கடனை தமிழக அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும். எனவே, அனைத்து தரப்பு விவசாயிகளின், அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். அப்பொழுது தான் ஒட்டு மொத்த விவசாயக் குடும்பங்களின் நலன் காக்கப்படும்.

மேலும், மதுக்கடைகள் திறக்கும் நேரம் பகல் 12 மணிக்கு என்பதை படிப்படியாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம், பிறகு 4 மணி நேரம் எனக் குறைத்துக் கொண்டே போக வேண்டும். மேலும், தற்போது 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்பதன் தொடர்ச்சியாக, விரைந்து 1000 மதுக்கடைகளை மூடி, பிறகு 2000 மதுக்கடைகள் மூடி ஒரு குறுகிய காலத்திற்குள் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளுக்கும் மூடுவிழா நடத்த வேண்டும்.

மது இல்லா சமுதாயம் உருவாக வேண்டும். அப்பொழுது தான் தமிழகத்தில் குடியால் அழிந்து போகின்றவர்களையும், அவர்களது குடும்பத்தையும் காப்பாற்ற முடியும். இது போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து வகுத்து, அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.

மேலும் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி அனைத்து தரப்பு மக்கள் நலன் காத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று வளமான தமிழகத்தை படைத்திட வேண்டியது தமிழக அரசின் கடமை'' என்று வாசன் கூறினார்.

SCROLL FOR NEXT