சேலம் மாவட்டம், கருமந்துறை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் ஆறு சுகப்பிரவசம் மூலம் குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்கள். 
தமிழகம்

சேலம்: மலைக்கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் ஆறு கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் ஆறு கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட கருமந்துறையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களாக பாலசண்முகம், ரேஷ்மிதா பணியாற்றி வருகின்றனர். மலைக்கிராமமான கருமந்துறை மக்கள் மருத்துவ உதவிக்கு, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு 11 மணி முதல் 9ம் தேதி காலை 9 மணி வரை அடுத்தடுத்து கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்தது. மருத்துவர்கள் பாலசண்முகம், ரேஷ்மிதா மற்றும் செவிலியர் ஆர்த்தி உள்ளிட்டோர் இரவு பணியில் இருந்த நிலையில், பிரசவத்துக்கு அனுமதியாகியிருந்த கர்ப்பிணிகள் ஸ்ரீ குர்த்தி, தெய்வானை, கலைவாணி, மணிமேகலை, கலாராணி, பவுண் ஆகிய ஆறு பேரும் பிரசவ வலி ஏற்பட்டு, அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

ஒரே நாளில் ஆறு குழந்தைகள் சுகப்பிரசவம் பார்க்கப்பட்டு, தாயும், சேயும் நலமுடன் உள்ளதை அறிந்து பொதுமக்கள் மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டினர்.

இதுகுறித்து செவிலியர் சுசீலா கூறும்போது, ”சேலம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே நாளில் அதிபட்சமாக ஐந்து பிரசவம் வரை பார்க்கப்பட்டுள்ளது. மலைக்கிராமமான கருமந்துறையில் ஒரே நாளில் ஆறு சுகப்பிரசவம் நடந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது. இங்கு 100 சதவீதம் சுகப்பிரசவம் மட்டுமே நடந்துள்ளது. இங்குள்ள பெண்கள் உழைக்க கூடியவர்களாகவும், ஆரோக்கிய உணவுகளையும், இயற்கை சூழ்நிலையில் வாழ்வதால் எளிதில் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT