தமிழகம்

‘சிங்கம்’ பட பாணியில் மீசை வைத்த காவலருக்கு நீதிபதி அறிவுரை

செய்திப்பிரிவு

உதகை நீதிமன்றத்துக்கு சிங்கம் திரைப்பட பாணியில் மீசையுடன் வந்த காவலருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அம்பலமூலா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராஜேஷ் கண்ணன். ஒரு வழக்கு தொடர்பாக உதகையிலுள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

சிங்கம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வைத்திருப்பது போல ராஜேஷ் கண்ணன் மீசை வைத்திருந்தார். இதைப் பார்த்த நீதிபதி முருகன், மீசையை நேர்த்தியான முறையில் சரி செய்து நீதிமன்றத்துக்கு வருமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, மீசையை சரி செய்து மீண்டும் நீதிமன்றத்துக்குள் ராஜேஷ் கண்ணன் வந்தார்.

இது தொடர்பாக காவல் துறையினர் கூறும்போது, “காவலர் அடையாள அட்டையில் இருப்பது போன்ற புகைப்படத்துடன் தான், அவர்கள் பணியில் இருக்கும் வரை இருக்க வேண்டும். அதைத் தாண்டி குடும்ப நிகழ்ச்சிக்காக மொட்டை அடித்தாலோ அல்லது பெரிய மீசை வைத்தாலோ உயர் அதிகாரியிடம் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. அடையாள அட்டையில் உள்ளபடி இல்லாததால் நீதிபதி அவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்” என்றனர்.

SCROLL FOR NEXT