தமிழகம்

இளைஞர்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்: நல்லகண்ணு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:

தமிழகத்தில் தேமுதிக-தமாகா- மக்கள் நலக்கூட்டணி இதுவரை இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து 48 ஆண்டுகள் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இந்த தேர்தலில் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

தேர்தலில் 3-வது அணி கிடையாது என, கருணாநிதி கூறி வருகிறார். பிறகு ஏன் திருவாரூரில் வைகோ கார் தாக்கப்பட்டது. தோல்வி பயம் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் தாதுமணல், கிரானைட் மற்றும் மணல் கொள்ளையில் பங்கு உள்ளது. மதுரை கிரானைட் கொள்ளையால் குளம், அரசு நிலங்கள் காணாமல் போய்விட்டன. இதில் ரூ.1.60 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. 4 யூனிட் ஆற்று மணலை ரூ.600-க்கு வாங்கி கேரளாவில் ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்கிறார்கள்.

தமிழகத்தில் இளைஞர்கள் 75 லட்சம் பேர் குடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என ஜெயலலிதா கூறிவருவது ஒரு ஏமாற்று வேலை. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT