தமிழகம்

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுவிக்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

செய்திப்பிரிவு

ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் அனுப்பிய கடிதத்தில், ''ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களின் பரிதாப நிலை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இவர்கள் அனைவரும் சவூதி அரோபியா நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித் தொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 23-ம் தேதி சவூதி அரேபிய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வழிதவறி ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் 5 பேரையும் ஈரான் நாட்டு கடற்படை கைது செய்து அந்நாட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளது.

இந்தப் பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். 5 தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெஹ்ரான் மற்றும் சவூதி அரோபியாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஈரான் சிறையில் வாடும் அப்பாவி ஏழை தமிழக மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT