பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கரூர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மைலம்பட்டி அருகேயுள்ள கோட்டகரையான்பட்டியைச் சேர்தவர் தர்மலிங்கம். இவர் மகன் லட்சுமணன் (28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அப்போது கடவூர் அருகேயுள்ள ஓந்தாகவுண்டனூரை சேர்ந்த பெண்ணும் அங்கே பி.ஏ ஆங்கிலம் படித்து வந்துள்ளார். அப்பெண்ணை லட்சுமணன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்.19-ல் அப்பெண் வீட்டுக்கு லேப்டாப் வாங்கச் சென்ற லட்சுமணன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு இருவரும் தனித்தனியாக தங்கி திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது அப்பெண்ணை லட்சுமணன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு பாட்டி வீட்டுக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றப்போது அவரது பாட்டி அப்பெண்ணை லட்சுமணனுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறியுள்ளார். லட்சுமணனும் அவரை திருமணம் செய்துகொள்வதாக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு திருமணம் குறித்து கேட்டபோது பெற்றோர் சம்மதித்தால்தான் திருமணம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கடந்த 2020-ம் ஆண்டு பிப்.6ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் சகோதரி புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் லட்சுமணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கில் கரூர் அனைத்து மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.நசீமாபானு இன்று (ஜூலை 12) வழங்கிய தீர்ப்பில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மேலும ரூ.1,000 அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இத்தீர்ப்பு நகல் கிடைத்த 3 மாதங்களுக்குள் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

SCROLL FOR NEXT