தமிழகம்

தமிழக மக்களை சந்திக்க சுற்றுப்பயணம்: மநீம செயற்குழுவில் கமல்ஹாசன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

செயற்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் கூறியதாவது: ‘சீரமைப்போம் தமிழகத்தை' என்ற முழக்கத் தோடு பல கட்டங்களாக தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்க விரும்புகிறேன். அந்த சுற்றுப்பயணத்துக்கான திட்டமிடலை நிர்வாகிகள் விரைவுபடுத்த வேண்டும். கட்சிக் கட்டமைப்பை கூடுதல் கவனத்தோடு வலுப்படுத்த வேண்டிய மாவட்டங்களை நோக்கி முதலில் பயணிப்போம் என்றார்.

கூட்டத்தில், "தமிழக அரசு விரைவில் பெண்கள் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT