படங்கள்: ம.பிரபு, ஜோதி ராமலிங்கம் 
தமிழகம்

பொதுக்குழு மேடையிலேயே கேபி முனுசாமி - சிவி சண்முகம் வாக்குவாதம் - சமாதானம் செய்த இபிஎஸ்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு மேடையிலேயே முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் கேபி முனுசாமி இருவரும் வாக்குவாதம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததால் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நேற்று நடந்தது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையாத நிலையில், பொதுக்குழுவில் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல், திமுகவுக்கு கண்டனங்கள் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் எல்லாம் சுமுகமாக போய்க் கொண்டிருந்தபோதே பொதுக்குழு கூட்டத்தில் திடீரென சலசலப்புகள் எழுந்தன. ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. மேடையிலேயே சில வாக்குவாதங்களும் இது தொடர்பாக நடந்தன. அப்போது குறுக்கிட்ட கே.பி.முனுசாமி, "உங்களுடைய உணர்வுகளை தீர்மானமாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார். அதுவரை அமைதி காக்கவும்" என்று சமாதானப்படுத்தினார்.

கேபி முனுசாமி பேசி முடித்துவிட்டு அமரவும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எழுந்து மேடையிலேயே அவருடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மிகவும் கோபத்துடன் அவரின் இருக்கையில் இருந்து எழுந்து கேபி முனுசாமி இருக்கைக்கு வந்து வாக்குவாதம் செய்தார். பதிலுக்கு சிவி சண்முகமும் வாக்குவாதம் செய்ய ஒரு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. இருவரையும் எடப்பாடி பழனிசாமி சமாதானம் செய்துவைத்து அமரவைத்தார். எனினும் சிவி சண்முகம் கோபத்துடன் பேசிக்கொண்டே அமர்ந்தார்.

இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் இப்போது கவனம் ஈர்த்து வருகின்றன. மேடையில் இருவரும் வாக்குவாதம் செய்ய என்னக் காரணம் உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. ஓபிஎஸ்-ஐ நீக்கும் தீர்மானத்தை இபிஎஸ் கொண்டுவருவார் என கேபி முனுசாமி பேசிய பின்பே சிவி சண்முகம் வாக்குவாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT