சென்னை: உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததால் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நேற்று நடந்தது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகம் பகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
ஒற்றைத் தலைமை சர்ச்சையால் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினரிடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வந்தது. கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவால், அன்றைக்கு ஒற்றைத் தலைமை குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கட்சியின் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன், ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு மீண்டும் ஜூலை 11-ல் கூடும் என அறிவித்தார்.
இந்த பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார். அதன்மீது விசாரணை நடத்திய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 11-ம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். ஆனாலும், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பழனிசாமி தரப்பினர் செய்து வந்தனர். மண்டபத்தின் முன்பு பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஸ்கேனர் வசதியுடன் எலெக்ட்ரானிக் நுழைவுவாயில் அமைக்கப்பட்டிருந்தது.
பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக பழனிசாமி தரப்பினர் நேற்று முன்தினமே சென்னை வந்துவிட்டனர். அவர்கள், நேற்று காலை 6 மணி முதலே பொதுக்குழு நடக்கும் மண்டபத்துக்கு வரத்தொடங்கினர். சோதனைக்குப் பின், வரிசையாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
காலை 8.51 மணிக்கு பொதுக்குழு மண்டபத்துக்கு பழனிசாமி வந்தார். அவரை முன்னாள் அமைச்சர்கள் பி.பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அவர் மேடைக்கு செல்லாமல் கீழேயே அமர்ந்திருந்தார்.
காலை 8.59 மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என தீர்ப்பளித்தார். இதைக் கேட்டு வானகரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். 9.15 மணிக்கு மண்டபத்தின் உள்பகுதியில் அதிமுக செயற்குழு கூடியது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடிய செயற்குழுவில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து, 9.30 மணிக்கு பொதுக்குழு தொடங்கியது. மேடைக்கு வந்த பழனிசாமி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வரவேற்று பேசினார். இதையடுத்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் 8 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், மீதமுள்ள தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் வாசித்தனர். கட்சி அமைப்புத் தேர்தலில் தேர்வான நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல், பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோருதல், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்குவது, இடைக்கால பொதுச் செயலாளர் நியமனம், 2017-ல் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தலை 4 மாதங்களில் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வராததால், கட்சியின் வரவு, செலவு கணக்குகளை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சமர்ப்பித்தார்.
பொதுக்குழுவில் பழனிசாமி பேசும்போது, “கிளைக்கழக செயலாளராக எனது பணியை தொடங்கி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். எனக்கு கட்சிதான் உயிர். காவல்துறை, ஓபிஎஸ் கூட்டாக சேர்ந்து நடத்திய நாடகம்தான் அதிமுக தலைமை அலுவலக தாக்குதல். நான் பழைய பழனிசாமி இல்லை. எம்ஜிஆரிடமும், ஜெயலலிதாவிட மும் பாடம் படித்த மாணவன். அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிவார்கள். வரும் 2024 மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தலும் வரலாம். அதில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்றார்.
இதனிடையே, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வரப்போவதாக கிடைத்த தகவலையடுத்து, பழனிசாமி ஆதரவாளர்கள் வந்து, அலுவலக கதவை பூட்டி உள்ளே காவலாக இருந்தனர்.
அங்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு, கலவரமானது. அங்கிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். காலை 8.40 மணிக்கு அதிமுக அலுவலகத்துக்கு வந்த ஓபிஎஸ், தனது ஆதவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி தலைமையில் அதிகாரிகளும் போலீஸாரும் வந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, வெளியில் வந்த ஓபிஎஸ், சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பின், வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்தின் கதவையும், பிரதான வாயிலையும் பூட்டி சீல் வைத்தனர்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்
ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான சிறப்பு தீர்மானத்தை பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வாசித்தார். அவர் பேசியதாவது:
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். திமுக மற்றும் அதன் தலைவர்களுடன் உறவு வைத்து, அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறார். அவருக்கு பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. கட்சியின் சட்டதிட்ட விதிகள்படி, ஓ.பன்னீர்செல்வத்தை உடனடியாக பொருளாளர் பொறுப்பு, கழக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பது என்றும், கட்சியினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் இந்த பொதுக்குழு தீர்மானிக்கிறது. மேலும், அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாகவும், சட்ட விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்தும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நீக்கியும் வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுகவின் புதிய பொருளாளராக நியமித்து, இடைக்கால பொதுச்செயலாளரான பழனிசாமி அறிவித்துள்ளார்.