கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சொகுசு விடுதி உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிடிபட்ட ஆவணங்கள்
சென்னை சிஐடி நகரில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட கோடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து செந்தில்குமாரின் தந்தையும் தொழிலதிபருமான ஓ.ஆறுமுகசாமி, உதவியாளர் பழனிசாமி உள்ளிட்டோரிடமும் போலீஸார் கடந்த சில நாட்களாக விசாரித்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர்
அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியைச் சேர்ந்த சொகுசு விடுதியின் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் விசாரிக்க முடிவு செய்த போலீஸார், அவருக்கு சம்மன் அனுப்பினர்.
நவீன் பாலாஜி கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை வரை இந்த விசாரணை நடந்தது.