தமிழகம்

தேர்தல் விதிகளை மீறியதாக வைகோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சட்டப்பே‌ரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளாருமான வைகோவுக்கு‌ தேர்தல்‌ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வைகோவுக்கு அனுப்பிய நோட்டீஸில், ''கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த போது, சசிபெருமாள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட ‌‌‌தமிழர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்த‌‌வர்கள்‌ என்று விவரித்த போது, தாங்கள் சாதியைப் பார்க்கவில்லை என்றும், திமுக, பாமக கட்சிகள் சாதி பார்ப்பதாகவும் பேசியது தேர்தல் விதிகளுக்கு எதிரானது.

சாதி குறித்த விமர்சனத்தை முன்வைத்தோ, சாதி மோதலைத் தூண்டியோ வாக்குகளைப் பெற முயற்சிக்கக் கூடாது.

இந்நிலையில், பிரச்சாரத்தில் சாதி குறித்துப் பேசியது ஏன்? என 25-ம் தேதி மாலை 3 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விளக்கம் அளிக்காவிட்டால் வைகோ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT