ஆட்டோ தொழிலாளி குடும்பம் தற்கொலை தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ராஜாங்கம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனாவால் ஏழை எளிய மக்கள் சில தனியார் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றிருக்கின்றனர். கரோனா குறைந்த பின்னும் அன்றாட செலவுக்கே வருமானம் இல்லாத நிலையில், கடனை அடைக்க முடியாமல் ஏழை எளிய மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் கடந்த 7-ம் தேதி ஆட்டோ தொழிலாளியும், அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் என குடும்பமே தற்கொலை செய்துள்ளனர். அங்கு நேரில் சென்று விசாரிக்கும்போது அந்த குடும்பம் கந்துவட்டி கும்பல் வலையில் சிக்கி சீரழிந்திருப்பது தெரிய வருகிறது. கடன் கொடுத்த கந்துவட்டி கும்பல் பலமுறை வீட்டுக்கு வந்து அவமரியாதையாக பேசுவது, வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை வலுக்கட்டாயமாக செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் அரியாங்குப்பம் காவல்நிலையம் எந்த அசைவும் இல்லாமல், மேற்கொண்டு விசாரணை நடத்தவில்லை என்பதும் வேதனை அளிக்கிறது. காவல்துறையைச் சேர்ந்த ஒரு பகுதியினருக்கும், கந்துவட்டி கும்பலுக்கும் உள்ள தொடர்பு காரணமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதேபோல் 50-க்கும் மேற்பட்ட நுண்நிதி கந்துவட்டி நிறுவனங்கள் புதுச்சேரியில் செயல்படுகின்றன. இவர்களும் இதே நிலையில் தான் ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறார்கள். அந்நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த குடும்பம் கந்துவட்டி கும்பல் வலையில் சிக்கி சீரழிந்திருப்பது தெரிய வருகிறது.