தமிழகம்

கோவையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 13 குழந்தைகள் உட்பட 25 பேர் மீட்பு

செய்திப்பிரிவு

கோவையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 13 குழந்தைகள் உட்பட 25 பேர் நேற்று மீட்கப்பட்டனர்.

கோவை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் நின்று குழந்தைகள், வயதானவர்கள் அதிகம் பேர் பிச்சை எடுத்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாங்களாகவே பிழைப்புக்காக பிச்சை எடுத்து வருகிறார்களா அல்லது பிச்சை எடுக்க வைக்கப்படுகிறார்களா என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

இந் நிலையில், சிக்னல்களில் பிச்சை எடுத்து வருபவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதன்பேரில், கோவை ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 4 துறைகள் இணைந்து மாநகரில் பீளமேடு ஃபன்மால் சிக்னல், சிட்ரா சிக்னல் ஆகிய இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு நடவடிக்கைக்கு கோவை ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஆர்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.

இதில், அந்த இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 5 வயதுக்கு கீழான 7 குழந்தைகள், 6 வயதுக்கு மேற்பட்ட 6 குழந்தைகள், 3 ஆண்கள், 9 பெண்கள் உட்பட 25 பேரை மீட்டனர். குழந்தைகள் அனைவரும் உக்கடம் தொன்போஸ்கோ அன்பு இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

பெரியவர்கள், கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் இரவு தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஆர்.கிருஷ்ணவேணி கூறும்போது,

‘மீட்கப்பட்டவர்ள், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து, போக்குவரத்து சிக்னல்களில் நின்று பிச்சை எடுப்பது குறித்து புகார்கள் வந்தன. காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நடவடிக்கையில் ஈடுபட்டோம்.

இவர்கள் தாங்களாக பிச்சை எடுக்கிறார்களா அல்லது இந்த தொழிலில் பிறரால் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை. அது தொடர்பாக மீட்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் பயத்தில் எதுவும் பேச மறுக்கின்றனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. வரும் நாட்களில் மாநகரில் ஏனைய இடங்களிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெறும்’ என்றார்.

SCROLL FOR NEXT