தமிழகம்

கரூர் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் பத்திரமாக மீட்பு

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் முன்பு ஒரு பெண் தனது தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவிய நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் இன்று (ஜூலை 11) நடைபெற்றது. கூட்டரங்கில் பொது மக்களிடம் ஆட்சியர் பிரபுசங்கர் மனுக்கள் பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது மனு அளிக்க வரிசையில் பின்னால் நின்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென இடுப்பில் வைத்திருந்த சிறிய பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அதிலிருந்த மண்ணெண்ணெயை தனது தலையில் ஊற்றிக்கொண்டார்.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரது கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி அவரை தடுத்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் பிரபுசங்கர், “அம்மா...” என பதறி, “எதற்காக இப்படி செய்தீர்கள்? இப்படி செய்யக்கூடாது” என அறிவுறுத்தி மனுவை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய ஊழியர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதன் பிறகு போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பெயர் சாந்தி (33) என்பதும், குளித்தலை அருகேயுள்ள கருங்கல்பட்டியை அடுத்த கணேசபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டிய நிலையில் தற்போது பட்டா கேட்டு சென்றபோது பாதை இல்லாததால் பட்டா தர மறுக்கின்றனர். பாதை வேண்டும் என்றால் பட்டா இருந்தால்தான் பாதை தர முடியும் என்கின்றனர். இதனால் விரக்தியடைந்த சாந்தி, ஆட்சியர் முன் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக போர்டிகோ வழியாக மனு அளிக்க வந்தவர்களை அனுமதிக்காமல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கின் வடபுறம் வழியாக ஒவ்வொருவராக கடுமையான சோதனைக்கு பின்பே கூட்டரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT