சென்னை: தன்னுடைய சுயநலத்துக்காக கட்சியை அழிக்க ஓபிஎஸ் முடிவு செய்து உள்ளதாக கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இபிஎஸ் வானகரம் புறப்பட்டுச் சென்றார். பொருளாளர் ஓபிஎஸ் தலைமைக் கழகத்திற்கு சென்றார்.
இதற்கிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதிமுக தலைமைக் கழகத்தின் பூட்டிய கதவுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடைத்தனர். தொண்டர்கள் ஆதரவோடு ஓபிஎஸ் கட்சி தலைமையக பால்கனிக்குச் சென்றார். அங்கிருந்து அவர் தொண்டர்களுக்கு கையசைத்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக பேட்டி அளித்த அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, "அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. கடந்த பொதுக் குழு கூட்டத்தின் போது அடுத்த பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது . இதை ஏற்றுக் கொண்டுதான் ஓபிஎஸ் சென்றார். ஆனால் இந்த பொதுக்குழுவிற்கு தடை வாங்க நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினார் ஓபிஎஸ். நீதிமன்றம் பொதுக்குழுவில் கலந்து கொண்டு உங்களின் கருத்துகளை தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறிய பிறகும் ஓபிஎஸ் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் விரக்தியின் உச்சசத்தில் இருக்கிறார். அவரின் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார். நிச்சயம் கட்சி அவரை கண்டிக்கும். இதற்கு மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு முடிவு செய்வார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.