தமிழகம்

ஏழைகளால் வெற்றிபெற்ற திமுக, அதிமுக பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது: திரிபுரா முதல்வர் பேச்சு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு நேய்வேலியில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது.

இதில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 50 ஆண்டுகளில் ஆறு கட்சிகள் போட்டியிடுவது இதுதான் முதல்முறை. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இன்று கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பாஜ, காங்கிரஸ், அதிமுக, திமுக அனைத்து கட்சிகளுமே பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்காமல் தனியார் மயத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றன. பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும் என்பது திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் செயல் திட்டத்திலேயே இல்லை. அவர்கள் புதிய பொருளாதார கொள்கைகளை தான் கடைபிடிக்கிறார்கள். தொழிலாளர் வர்க்கத்தினர் ஒன்றுபட்டு இதை எதிர்க்க வேண்டும்.

தாராள மயம், தனியார் மயம் ஆதரவு உள்ள தமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட 6 கட்சி கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி வாக்கு கேட்டு வருகின்றனர். அதன்படி நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா முழுவதும் பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்படும். தொழிலாளர் நலன்கள் பாதுகாக்கப்படும்.

திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். திமுக அரியணை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என்எல்சியை பாதுகாப்பதற்கு அதிமுக, திமுக கட்சியில் உள்ளவர்கள் அதிலிருந்து விலகி மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவ்வாறு பேசினார்.

விழுப்புரம்

இதேபோல் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமமூர்த்தியை ஆதரித்து பேசியதாவது: தமிழகத்தில் திமுக, அதிமுக 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து மக்களை ஏமாற்றி வருகின்றன. ஏழைகளின் ஆதரவில் வெற்றி பெற்ற அவர்கள், பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

அதனால் இந்தமுறை நீங்கள் அவர்களை ஆதரிக்க கூடாது. அவர்கள் ஊழல் பேர்வழிகள். 2-ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பியும், அமைச்சரும் சிறைக்கு போயினர். இதேபோல் அதிமுக முதல்வரும் சிறைக்கு போனவர். இதனால், தமிழக மக்கள் மாற்று அணியை தேடி வருகின்றனர். அதற்காக 6 கட்சி கூட்டணி மாற்றாக வந்துள்ளது.

இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா அமைத்து ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். ஆனால், திமுக, அதிமுகவால் அப்படி சொல்ல முடியுமா? சொன்னால், அவர்கள் தான் முதலில் ஜெயிலுக்கு போவார்கள். அவர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

திரிபுராவில் 18 ஆண்டுகளாக முதல்வராக உள்ளேன். திரிபுரா அரசு ஏழை மக்களுக்கு பாடுபட்டு வருகிறது. இல்லாதவர்களுக்கு வீடு, நிலம் வழங்கி வருகிறது. அங்கு பிச்சைக்காரர்களை பார்க்க முடியாது. அங்கு ஏழைகள் இல்லை. மத கலவரம் கிடையாது. இதனோடு தமிழகத்தை ஒப்பிட்டால் பரிதாப நிலைதான் உள்ளது. அங்கு தீண்டாமை இல்லை. இங்கே அத்தனை கொடுமையும் உள்ளது. இதை ஒழிப்பதற்கு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT