சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மசூதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிகள் பங்கேற்றனர். புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துகளைப் பரிமாறியும் மகிழ்ந்தனர்.
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி நேற்று காலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு, முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல, சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நேற்று நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நண்பர்கள், ஏழைகளுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தனர்.
மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன், மெரினா கடற்கரை, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மகிழ்ந்தனர். இதனால் நேற்று மாலை மெரினா கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. இதேபோல, தமிழகம் முழுவதும் நேற்று முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன், மெரினா கடற்கரை, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மகிழ்ந்தனர்.