அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது நுழைவுத்தேர்வை தவிர்க்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங் கோட்டையில் ஜெயலலிதா நேற்று பேசியதாவது:
மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது கிராமத்து ஏழை மாணவர்களுக்கு பாதகமாக இருப்பதால் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 2005-ம் ஆண்டில் இதற்கான அரசாணையை அதிமுக ஆட்சியின்போது வெளியிட்டோம். அதற்கு அடுத்த ஆண்டில் இதற்காக தனிச் சட்டமும் இயற்றப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மீண்டும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 18.7.2013-ல் பொது நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். மீண்டும் 2014 ஜூன் மாதத்தில் தற்போதைய பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில்தான் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தமிழகத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். ஆனால், இந்த வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் சரியாக வாதிடவில்லை என்று கருணாநிதி பொய் கூறுகிறார்.
2010-ல் இது தொடர்பான அறிவிக்கை வந்தபோது மத்திய கூட்டணியில் அங்கம் வகித்த கருணாநிதி, பிரதமரிடம் எடுத்துச்சொல்லி தமிழகத்துக்கு விலக்கு பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் 2-ஜி சிந்தனையில் இருந்ததால் அதை செய்யவில்லை.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொது நுழைவுத் தேர்வு இல்லாமல், தொடர்ந்து பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க் கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப் பட்டால் இதற்காக தனியே சட்டம் கொண்டு வரப்படும். அதிமுக தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் இதை கருணாநிதி குறைகூறுகிறார். அவரும், அவரது மகனும் மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, அதற்கு சூப்பர் ஹீரோ என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள்.
ஏழை எளிய மக்களுக்கு பயன்தரும் எந்த திட்டங்களும் திமுக தேர்தல் அறிக்கையில் இல்லை. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
கூட்டத்துக்கு வந்த முதியவர் பலி
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என். புதுக்குடியை சேர்ந்தவர் ராஜாமணி (72). பாளையங் கோட்டையில் பெல் பள்ளி மைதானத்தில் நேற்று மாலையில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது: ராஜாமணியும் மற்றவர்களும் வாகனத்தில் இருந்து இறங்கி பொதுக் கூட்டம் நடைபெறும் திடலுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜாமணி திடீரென்று மயங்கி விழுந்துள் ளார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.