தமிழகம்

பக்ரீத் பண்டிகை:  தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்ஸாமிய மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ்: பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.

பக்ரீத் திருநாளை கொண்டாடுவது இஸ்லாமியர்களாக இருக்கலாம்; ஆனால், பக்ரீத் திருநாள் சொல்லும் செய்தி அனைவருக்குமானது தான். பக்ரீத் திருநாளை முன்வைத்து இஸ்லாம் சொல்லும் செய்தியைத் தான் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மதங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களும் சொல்லும் செய்தி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்பது தான்.

இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

வைகோ: " நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்" என்று அவர் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர்: " மேலான அன்பு, மனிதாபிமானம், பொருமை ஈகை ஆகியவற்றின் அடிப்படையில் தன்னலமற்ற நிலையில் உருவாகுவதுதான் தியாகம். இந் நன்னாளில் நபிகள் (ஸல்) நாயகம் போதித்த சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், மன்னிப்பு, மனிதநேயம், அன்பு ஆகியனவற்றை சாதி, மத, மொழி, இன பாகுபாடுகளைத் தாண்டி கடைப்பிடித்து மனித சமுதாயம் தழைத்தோங்கவும், கொரோனா எனும் தொற்று அகன்று மனித குலம் நிம்மதியாய் மகிழ்வுடனும், வளமுடனும், வாழ்ந்திடவும் அருள் புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இஸ்லாமியப் பெருமக்கள்; அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: " இஸ்லாமியர்கள் இறைபக்தியில் மட்டுமின்றி, ஈகையிலும், தியாகத்திலும் இணையற்று திகழ்கின்றனர். இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதாகும். அதற்காகத் தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரீத் வலியுறுத்துகிறது. இது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அற்புதமான பாடமாகும்.

பக்ரீத் போதிக்கும் பாடத்தை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறி, அத்தகைய நிலையை உருவாக்குவதற்கு உழைக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

சரத்குமார்: "அன்பு, அறம், அமைதி, ஈகை, இரக்கம், கருணை ஆகிய நற்பண்புகளுடன் மனிதகுலம் அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதையில் செல்வதற்கு விடாமுயற்சியுடன் ஒற்றுமையாக பாடுபடுவோம். மதநல்லிணக்கத்தை பேணி சமத்துவ, சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ்வில் மென்மேலும் உயரவும், இன்புற்று வாழவும் இந்த பக்ரீத் திருநாள் ஆசி புரியட்டும்.

இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையுடனும் உன்னத திருநாள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT