சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4 ஆயிரத்து 70 கோடி மதிப்பீட்டில் 1,033 கிமீ நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகத் துறை செயலர், திருப்புகழ் தலைமையிலான குழு, மண்டல அளவில் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அப்பணிகள் தொடர்பாக 3 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டம் நடத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பணிகளையும் 90 நாட்களுக்குள் முடிக்க இலக்கு வழங்கப்படுகிறது.
அப்போது பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. திருப்புகழ் குழு ஆய்வு செய்து வழங்கும் பரிந்துரைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறும் பகுதிகளில் 834 மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு. அவற்றில் 514 மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
கடந்த முறை 770 கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்களில் தூர்வாரப்பட்டது. இந்த ஆண்டு ரூ.90 கோடியில் 1085 கிமீ நீளத்துக்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகளை தாமதமாகச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் 8 பேருக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டம் நடத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது. 90 நாட்களுக்குள் முடிக்க இலக்கு வழங்கப்படுகிறது.