தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு விரைவு ரயில்கள் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்தன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விரைவு ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. மேலும், காலை 11 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், சிக்னல்கள் தெளிவாக தெரிவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. மின்சார ரயில்கள் மெதுவாகவும், ஆங்காங்கே நின்றும் சென்றதால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கனமழையின் காரணமாக இன்று அதிகாலையில் எழும்பூர் வர வேண்டிய நெல்லை, பாண்டியன், தூத்துக்குடி, பொதிகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்தடைந்தன.
காலை 10 மணிக்கு மேல் செங்கல்பட்டு அருகே சிக்னலில் திடீரென பழுது ஏற்பட்டது. 11 மணியளவில் அது சரி செய்யப்பட்டது. இதனால், திருச்செந்தூர் விரைவு ரயில் ஒன்றரை மணிநேரமும், பல்லவன் விரைவு ரயில் ஒரு மணிநேரமும், பாண்டிச்சேரி விரைவு ரயில் 45 நிமிடங்களும் காலதாமதமாக வந்தடைந்தது. இதனால் ரயில் பயணிகள் அவதிப்பட்டனர்.