எஸ்எஸ்எல்சி தேர்வில் சென்னை மாவட்டத்தில் 94.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 2 இடங்களை மாணவிகளே பிடித்தனர்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 574 பள்ளிகளைச் சேர்ந்த 52 ஆயிரத்து 668 மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களில் 49 ஆயிரத்து 638 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.25 சதவீதம் ஆகும். வேப்பேரி டவுட்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.வி.ஜானவி 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். (மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த 224 பேர்களில் ஜானவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது).
மேலும், திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தீப்தா, வில்லிவாக்கம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்ஆர்எஸ் ஜெயஸ்ரீ, சாந்தோம் ரோசரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எம்.லத்திகா, ஆர்.விதிஷா, வேளச்சேரி பெத்தேல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜி.நூதன், மாணவி பி.உத்ரா, தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.பிரியங்கா, அண்ணா நகர் ஜெஜிவிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எம்.ரம்யா, டி.சினேகா, அடையார் செயின்ட் மைக்கேல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எப்.சல்மா அப்ரா ஆகிய 10 பேர் 500-க்கு 496 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், 500-க்கு 495 மதிப்பெண் பெற்று 21 பேர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.