சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணனை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் பேசியதாவது.
50ஆண்டுகளில் தமிழகத்தை கட்டுக்குள் வைத்திருந்த 2 திராவிட கட்சிகளின் ஆட்சிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடைபெறும் தேர்தல் இது. இதில் மக்கள் நல கூட்டணி, தேமுதிக, தமாகா கட்சியின் தலைவர்கள் 6 பேரும் 6 முகங்களாக இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒன்றாக, வேறுபாடின்றி, ஒரே முகத்தோடு மக்களை சந்திக்கின்றோம்.
தமிழகத்து மக்களை கல்வி, வேலை வாய்ப்பில், உயர்த்திட இந்த அணி பாடுபடும். காமராஜர் முதலமைச்சராக இருந்த போதுதான் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் புரட்சி ஏற்பட்டது. குறைந்த வருமானத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தார். காரணம் அவரிடம் பொது நலன் இருந்தது. ஆனால் இன்றைய ஆட்சியில் வருமானம் அதிகமாக உள்ளது. ஆனால் திட்டங்கள் குறைவாக உள்ளது. அதற்கு காரணம் பொதுநலன் இல்லை. சுயநலத்தோடு செயல்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை கொண்டு வந்தது திமுக ஆட்சி. அதனை அதிக அளவில் திறந்து பரவச் செய்தது அதிமுகவின் வேதனையான சாதனை. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களில் இன்னும் மதுக் கடைகள் இருக்கிறது. இதனால் மதுக் கடைகளை மூடச் சொல்ல பாஜகவிற்கும், காங்கிரஸூக்கும் அருகதை இல்லை. இப்போது மக்களை நாங்கள் சந்திக்க செல்லும் போது நல்ல மரியாதை கிடைக்கிறது. நல்ல வரவேற்பும் உள்ளது. மக்கள் தற்போது நம்மை நம்புகின்றனர். இளைஞர்கள், பெண்கள், புதிய வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் மனதில் நல்ல மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடக்கிறது. 110 விதி வாக்குறுதியைப்போல, தவறான தகவல்களை மக்களுக்கு நாங்கள் கொடுக்க மாட்டோம். மே 19 ம் தேதி மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்.
சிதம்பரம் தொகுதியில் தடுப்பணை, பாதாள சாக்கடைதிட்டம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தல், அண்ணாமலை பல்கலையில் உள்ள தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்தல் உள்ளிட்டவைகள் மக்கள்நலக் கூட்டணி ஆட்சியில் செய்து தரப்படும். இவ்வாறு பேசினார்.