தமிழகம்

தம்பி, தங்கைகள் 4 பேருடன் வசித்து வரும் மாற்றுத்திறன் பெண்ணுக்கு வங்கிப் பணி வழங்கிய கூட்டுறவுத் துறை

செய்திப்பிரிவு

சென்னை: தம்பி, தங்கைகள் 4 பேருடன் தனியாக வசித்து வரும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுறவு வங்கியில் பணி வழங்கி கூட்டுறவுத் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் மாற்றுத்திறனாளியான சுகுணா தனது மூன்று தம்பிகள் மற்றும் ஒரு தங்கையுடன் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்பது தெரிந்து, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அவரை தொடர்புகொண்டு விசாரித்தனர்.

அப்போது அவர் தனக்கு ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள் உதவி கிடைப்பதாகவும், ஏதாவது நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் வகையில் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் சாந்தோம் கிளையில் அயற்பணி முறையில் துணை ஊழியராக பணி ஆணையும், வங்கியின் பொதுநல நிதியிலிருந்து ரூ.20,000-க்கான வங்கி வரைவோலையுடன் மூன்று சீருடைகளும் கூட்டுறவுத் துறை சார்பில் அவருக்கு இன்று வழங்கப்பட்டது.

கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், சுகுணாவின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று, அவரைச் சந்தித்து அவருக்குத் தேவையான அரசின் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT