மோசமான வரலாற்றுக்கு சொந்தக் காரராக ஜெயலலிதா இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி கேயனை ஆதரித்து மதுரை புதூரில் அவர் நேற்று பேசியது:
காமராஜரும், கருணாநிதியும் ஆட்சியில் இருந்தபோது மக்களை சந்தித்ததால்தான் பல திட்டங்களை கொண்டுவர முடிந்தது. ஆனால், கோடநாட்டில் ஓய்வெடுத்த ஜெய லலிதா மக்களை சந்திக்கவில்லை.
சென்னையில் வெள்ளம் வந்தபோது மக்களுக்கு ஆறுதல், நிவாரணம் வழங்கவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் நாணயமான அதிகாரிகளால் வேலை பார்க்க முடியவில்லை.
இலங்கை பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை போன்றவற்றில் பிரத மருக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமையை முடித்துக்கொண்டார். முன்னர் வளர்ச்சியில் 5-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 18-வது இடத்துக்கு பின்னோக்கி கொண்டு சென்றார்.
ஜெயலலிதாவால் முழுமை யாக செயல்பட முடியாதபோது அவரால் படிப்படியாக எப்படி மதுவிலக்கை கொண்டுவர முடியும்? எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது ஜெயலலிதாவுக்கு அன்பு வரும். இப்போது அவர் மீது வந்துள்ள அன்பு தேர்தலுக்கு பின் காணாமல் போய்விடும்.
மோசமான வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா. மக்கள் நலக் கூட்டணியால் ஒருபோதும் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது என்றார்.