கோவை: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டிய அவசியமில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோவை மதுக்கரையை அடுத்த குரும்பபாளையத்தில் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்புடன் ரூ.27 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்த அவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வருமுன்காப்போம் திட்ட முகாமை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம்பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கும் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை. தற்போது பரவும் தொற்றானது குடும்பத்தில்ஒருவருக்கு வந்தால், அனைவருக்கும் பரவுகிறது.
ஆர்டிபிசிஆர்பரிசோதனையில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுஉறுதிசெய்யப்பட்டாலோ, தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 40சதவீதத்துக்கும் மேல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஆனால் தற்போது 5 சதவீதம்பேர் மட்டுமே தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டிய அவசியமில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியிலிருந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபடம் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட உள்ளது. கட்டுமான பணிகள் தொடங்க 6 மாதங்கள் ஆகும். கோவை மாவட்டத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி வேண்டும் என்றகோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
கோவை போன்ற இடங்களில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்க கூடுதலாக ஒரு பதிவு மையம் அமைக்கப்படும். ஏழை மக்கள் மற்றும் இந்த காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் போன்றவர்கள் அவர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை விரைந்து கிடைக்க உறுதுணையாக இருப்பார்கள்.
அரசு மருத்துவமனைகளில் பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் எங்கெல்லாம் கேமராக்கள் இல்லையோ அங்கெல்லாம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.