சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை குறித்தகாலக்கெடுவுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று, அனைத்து்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும், அதன்மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தவிர்க்கலாம் என்றும், அவ்வாறு அமல்படுத்த முடியவில்லை என்றால், மேல்முறையீடாவது செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, வழக்கு ஒன்றில் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தவிர்க்க,நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும், இல்லையேல் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அனைத்துத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஜெ.ரவீந்திரன், தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார்.
மேலும், அந்த கடித நகலையும் தலைமை நீதிபதியிடம் அவர் சமர்ப்பித்தார். அதை தலைமை நீதிபதி அமர்வு பதிவு செய்துகொண்டது.