தமிழகம்

திருவண்ணாமலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 30 பேர் கைது: ஒரே நாளில் பறக்கும் படையினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5.30 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அவற்றை தடுக்க முயற்சியில் கண்காணிப்புப் பணிகளை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடி கண்காணிப்பில் ரூ.5.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவைச் சேர்ந்த 13 பேரும் திமுகவைச் சேர்ந்த 15 பேரும் காங்கிரஸ் மற்றும் பாமகவைச் சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.5,29,960 தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருந்த 1,482 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் ஆகும்.

SCROLL FOR NEXT