உலக சைக்கிளிங் சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக ஓட்டப்பிடாரம் பகுதி மாணவி ஸ்ரீமதிக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான நவீன சைக்கிளை வழங்கினார் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி. உடன் அமைச்சர் பெ.கீதாஜீவன். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு ரூ.14 லட்சத்துக்கு சைக்கிள்: கனிமொழி எம்.பி. உதவி

செய்திப்பிரிவு

உலகப் போட்டியில் பங்கேற்கும் ஓட்டப்பிடாரம் மாணவிக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான நவீன சைக்கிளை, தூத்துக்குடி எம்.பி கனிமொழி வாங்கி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சேசையா-தாயம்மாள் தம்பதியினரின் மகள் மதி. அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மதி மாவட்ட, மண்டல அளவிலான சைக்கிள் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதற்கான நவீன சைக்கிள் வாங்குவதற்கு வசதியில்லாததால் அந்தப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

மாணவியின் வேண்டுகோளை ஏற்று அப்போது தூத்துக்குடி எம்.பி கனிமொழி ரூ.5.5 லட்சம் மதிப்பிலான நவீன சைக்கிளை வாங்கிக் கொடுத்தார். இந்த சைக்கிளின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் குழு போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் மதி வென்றார்.

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இதையடுத்து இஸ்ரேலில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக ஜூனியர் பெண்கள் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மதி தேர்வு செய்யப்பட்டார்.

இப்போட்டியில் பங்கேற்பதற்கான பிரத்யேக சைக்கிள் வாங்கித் தருமாறு மதி மீண்டும் கனிமொழி எம்.பியிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ரூ.14 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் மற்றும் அதற்கான ஹெல்மெட், ஷூ உள்ளிட்டவற்றை கனிமொழி எம்.பி வாங்கி கொடுத்துள்ளார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT