தமிழகம்

பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை - இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்துகள்

செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு சில மணிநேரங்கள் முன்பு வெளியானது.

தமிழ் சினிமாவின் மகத்தான இசையமைப்பாளர் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் 'பத்ம விபூஷண்' விருதையும் பெற்றார் இளையராஜா. 5 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். அப்படி இசைக்கான அவரது கலைச் சேவையை பாராட்டும் வகையில் இளையராஜா இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றது.

இளையராஜாவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்தில், ''இளையராஜா என்ற படைப்பு மேதை தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அதேபோல அவரது வாழ்க்கைப்பயணமும் ஊக்கமளிக்கிறது. எளிய பின்னணியிலிருந்து வந்தவர், பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

"மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தனது வாழ்த்தில், "இசை மாமேதை உத்வேகம் தரும் தனது வாழ்க்கை பயணத்தில் இசைஞானி இளையராஜா, பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்துக்கள்" என்றுள்ளார்.

அதேபோல் நடிகர் கமல்ஹாசன், "ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, "கிராமிய இசையையும்,ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கும், தமிழருக்கும் பெருமை.... இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று வாழ்த்தியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாழ்த்தில், "ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வந்து பல்வேறு சாதனைகள் புரிந்த இசைஞானி இளையராஜா அவர்களின் தேசப்பணி சிறந்து விளங்க வாழ்த்துவோம்...!" என்றுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை!... #என்றும்_ராஜா_இளையராஜா" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT