தமிழகம்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முயற்சிக்கிறோம்: ஆளுநர் தமிழிசை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இலங்கையிலுள்ள மீனவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை (ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்) ஒட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 75 பள்ளிகளைப் பார்வையிட்டு மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் முயற்சியின் ஒரு பகுதியாக துணை நிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரியில் 2-ம் நாளாக இன்று இரு பள்ளிகளை பார்வையிட்டார். காலையில் சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்ற பொம்மலாட்ட கலை நிகழ்வினை பார்த்தார்.

அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "கல்வி அறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும். புதியக் கல்விக் கொள்கையில் தரப்பட்டுள்ளதுபோல் மேம்படுத்தப்படவேண்டும். குழந்தைகளுக்கு தரப்படும் மதிய உணவை சாப்பிட்டு பார்த்தேன். இன்னும் இரண்டு நாள் தொடர்ந்து மதிய உணவு சாப்பிடுவேன். மதிய உணவில் சத்தானதை சேர்ப்பேன். சிறுதானியம் தருவது பலம். அதேபோல் முட்டை, வாழைப்பழம் தருவதும் பலனளிக்கும். ஒருவாரம் பார்த்துவிட்டு, மதிய உணவில் மாற்றம் தர ஆலோசனை தருவேன்.

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு பஸ் வசதி, மதிய உணவு, சீருடை, புத்தகங்கள் விரைவாக தர நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் மக்கள் பீதியடைய வேண்டாம். காலரா நிலை கட்டுக்குள் உள்ளது. காரைக்காலில் குடிநீர் குழாய் உடைவது ஒரு வருடத்துக்குள் அல்ல. இதற்கு முன்பு இருந்த நிர்வாகம் சரியாக இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம்.

காரைக்காலில் உள்ள குடிநீர் குழாய்களை ரூ.50 கோடியில் முழுவதும் மாற்ற உள்ளோம். எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கட்டும். மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தரப்படுவதால் பலன் கிடைக்கும்.

இலங்கையிலுள்ள மீனவர்களை விடுவிக்க அனைத்து முயற்சி எடுத்து வருகிறோம். வெளியுறவுத் துறை இணை அமைச்சரிடம் பேசியுள்ளேன். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இன்று பேசுவேன்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT