உதகமண்டலம்: நீலகிரியில் சாரல் மழையால் தொடர்ந்து பெய்துவருவதால் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. காற்றுடன் மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு அகலார் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத கற்பூரம் மரம் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது.
உதகை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தா தலைமையில் சம்பவ பகுதிக்கு சென்ற தீயணைப்பு துறை ஊழியர் மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்த காரணத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என, நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.