மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரும் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்துள்ள உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் அரசு அவசரப்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம்குமாரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஏராளமானோர் ஆசிரியர் பணி கிடைக்காமல் உள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் தேர்வு வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை. இதனால் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வாய்ப்புள்ளது. எனவே தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் தகுதியற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் வாய்ப்புள்ளது. இதனால் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிப்பதாக’ நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். அதை உடனடியாக விசாரித்து தடையை விலக்கி உத்தரவிட வேண்டும். தடை விதித்த உத்தரவின் நகல் கிடைக்காததால் மேல்முறையீடு செய்ய முடியவில்லை’ என்றார்.
அதற்கு நீதிபதி, ‘தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் அரசுக்கு ஏன் இந்த அவசரம். பிரதான வழக்கு விசாரணைக்கு வரும்போது தடையை நீக்கக்கோரும் மனுவையும் விசாரிக்கலாம்’ என்று கூறி விசாரணையை ஜூலை 8-க்கு தள்ளி வைத்தார்.