தமிழகம்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: கோவை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ தமிழக அரசு பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவலை தடுத்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உழவர் சந்தைகள், வாரச்சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தாத அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சுகாதார ஆய்வாளர்கள் இதனை கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT