சென்னை: சுரங்கம் தோண்டுவதற்கான ராட்சத இயந்திரம் சீனாவில் இருந்து தனித்தனி பாகங்களாக சென்னை வந்துள்ளன. இதையடுத்து, மாதவரத்தில் இருந்து தபால்பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணி அக்டோபரில் தொடங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணி சுமார் ரூ.63,200 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகிறது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் 3-வது வழித்தடம் (வழி: கெல்லீஸ்), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி 4-வது வழித்தடம் (வழி: தியாகராய நகர்), மாதவரம் - சோழிங்கநல்லூர் 5-வது வழித்தடம் (வழி: மேடவாக்கம்) ஆகிய 3 வழித்தடங்களில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரையும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மாதவரம் - சிஎம்பிடி நிலையம் வரையும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுரங்கப்பாதை அமைக்க, சுரங்கம் தோண்டும் 23 ராட்சத இயந்திரங்கள் தேவைப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை வரும் மாதங்களில் சென்னை வரவுள்ளன.
இதற்கிடையே, சுரங்கம் தோண்டும் பணிக்கான முதலாவது ராட்சத இயந்திரம் சீனாவில் இருந்து 10 தனித்தனி பாகங்களாக கடந்த மாத இறுதியில் சென்னைக்கு வந்துள்ளது. இந்த பாகங்கள் மாதவரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு இவற்றை ஒருங்கிணைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இப்பணி முடிவதற்கு 2 மாதங்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.
அதைத் தொடர்ந்து, மாதவரம் - சிப்காட் வழித்தடத்தில், மாதவரத்தில் இருந்து தபால்பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணியை அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்ட ஏதுவாக, மாதவரம், தபால்பெட்டி மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிந்து, 23 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பணி முடிந்ததும் சுரங்கம் தோண்டும் ராட்சத இயந்திரம் உள்ளே இறக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும். 2-வது இயந்திரம் வந்ததும், தபால்பெட்டி - கெல்லீஸ் இடையே சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.