சென்னை: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால் ஏழைகளின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட குறைவு என்று டெல்லியில் நடந்த உணவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் சார்பில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழகத்தில் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும்சமூகப் பாகுபாடின்றி உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகள், திட்டங்களை செயல்படுத்துவதில், முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
மக்களுக்கு சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் வகையிலான ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்’, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தில் 2 வாரங்களுக்கு ஒரு முறை முட்டை ஆகிய திட்டங்களை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டில் வாரத்தில் 5 நாட்களுக்கு முட்டை வழங்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணமாக 14 வகை மளிகைப் பொருட்கள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கடந்த ஆண்டு ஜூன், ஜூலையில் வழங்கியது. இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு, 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட பல்முனை வறுமைக் குறியீடு அறிக்கையில், தமிழக மக்கள்தொகையில் 4.98 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் உள்ளதாகவும், நாடு முழுவதும் 25.01 சதவீதம் பேர் வறுமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது விநியோகம், சிறப்பு பொது விநியோகத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.