விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடரும் திருட்டுகளால் பாதிக்கப்பட்டோர், புகாரளித்து நீண்ட நாட்களாகியும் பொருட்களை மீட்டுத் தராததால், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பெண்ணாடம் வடகரையைச் சேர்ந்த சேகர் என்பவரின் குடும்பத்தினர் நேற்று முன் தினம் அதிகாலை வீட்டின் முன் படுத்திருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி சேகர் மகள் பவானி அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்து விட்டு, தப்பிச் சென்றனர்.
அதேபோன்று விருத்தாசலத்தை அடுத்த பெரியவடவாடியில் வசிக்கும் நவீன்குமார் என்பவர் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் திரும்பிய நிலையில், வீட்டிலிருந்து 14 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதேபோன்று விருத்தாசலத்தை அடுத்த காரையூர் கிராமத்தில் வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்த கலையரசி என்பவரின் கழுத் திலிருந்து 5 பவுன் செயின் மற்றும் வீட்டினுள் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதவிர கடந்த ஒருவார காலத்திற்குள் 6-க்கும் மேற்பட்ட தொடர் திருட்டுச் சம்பவங்கள் இப்பகுதியில் நடநதுள்ளது.
இதற்கு மத்தியில் விருத்தாசலத்தை அடுத்தபுதுக்கூரைப்பேட்டையில் வசிக்கும் சின்னதுரை என்பவர் வீட்டில் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி 110 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. இவ்வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமலும், பொருட்கள் மீட்கப்படாமலும் உள்ளது. பாதிப்புக்குள்ளான சின்னதுரை தன் மனைவி தனலட்சுமி மற்றும் அவரது பிள்ளைகளுடன் இரு தினங்களுக்கு முன் புதுகூரைப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர் திருட்டுகளால் அதிருப்தி நிலவும்சூழலில் விருத்தாசலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீஸார், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் வீடு வீடாகச் சென்று திருட்டு தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார்.
இத்தொடர் திருட்டு தொடர்பாக இப்பகுதி யைச் சேர்ந்த காவல்துறையினர் சிலர் கூறுகை யில், “போலீஸாரின் கைகளை அரசு கட்டி விட்டது. விசாரணையில் கடுமை காட்ட முடிய வில்லை.
மாலை 6 மணிக்கு மேல் விசாரணை கூடாதுஎன்பது உள்பட பல நிபந்தனைகள் உள்ளன.கடும் கெடுபிடி காட்டிவிட்டு, ‘திருடனை பிடி!’என்றால் எப்படி பிடிப்பது? திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்த அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள காவலர்களால் ஓரள வுக்கு கணிக்க முடியும்.
அவர்களை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் தான் இதில் குற்றவாளிகளை கண்டறிய முடியும்” என்கின்றனர்.