புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை | கோப்புப் படம். 
தமிழகம்

'புதிய கல்விக் கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்': ஆளுநர் தமிழிசை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை (ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்) ஒட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 75 பள்ளிகளைப் பார்வையிட்டார்.

அப்போது அவரிடம், ''புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் கடந்த மாதம் 23 ஆம் தேதி வகுப்புகள் திறக்கப்பட்டன. ஆனால் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. 6 ஆம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் தரப்படவில்லை. சீருடையும் தரவில்லை. இவை அனைத்தும் பள்ளி திறக்கும் நாளிலேயே தரப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்தும் இதுவரை ஏதும் செயல்படுத்தவில்லை'' போன்ற குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டன.

இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை கூறியதாவது: ''பள்ளி மாணவர்கள் பஸ் இயக்க புதிய டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களில் பஸ் இயக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு புத்தகம் தந்து விட்டோம். 6 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு புத்தகம் தரும் பணியை தொடங்கியுள்ளோம். பள்ளிகளுக்கு செல்வதால் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரி செய்ய முடியும்.

எந்த குறைபாடையும் நியாயப்படுத்தவில்லை. அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்படும். புதிய கல்விக் கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறை நவீனமயமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக முதல்வர் , கல்வித்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT