தமிழகம்

ரயில் பெட்டி வாஷ் பேஷனில் சிகரெட் குவியல்... மின்சார பேனலில் பாதி எரிந்த பீடி... - தெற்கு ரயில்வே அடுக்கிய 3 குறிப்புகள்

செய்திப்பிரிவு

சென்னை: பயணிகள் தங்களது ரயில் பயணத்தின்போது புகைப்பிடிக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின்போது புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால், இதையும் மீறி பலர் புகைப்பிடித்து வருகின்றனர். இதைத் தடுக்க ரயில்வே சார்பில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயிலை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கழிவறையில் உள்ள வாஷ் பேஷனில் சிகரெட் குவியல் இருந்ததை பார்த்தனர். மேலும், மின்சார பேனலில் எரிந்த பீடி இருப்பதை கண்டறிந்தனர்.

இப்படி ரயிலில் புகைபிடிப்பது விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் பயணத்தின்போது ரயில்களில் புகைப்பிடிக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று ரயில் சோதனையின்போது, ​​வாஷ் பேஷனனில் பாதி எரிந்த சிகரெட்டுகளையும், மின்சார பேனலில் பாதி எரிந்த பீடியையும் எங்கள் குழுவினர் கண்டறிந்தனர்.

முதலில் ரயில்களில் புகைப்பிடிக்க அனுமதி இல்லை. இரண்டாவது, வாஷ் பேஷன்களில் அடைப்பு ஏற்படுகிறது. மூன்றாவது அந்த பீடிகள் ரயில்களில் தீயை ஏற்படுத்தும்.

எனவே பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ரயில்களில் புகைப்பிடிக்க வேண்டாம். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுங்கள். ரயில்களில் உள்ள மின்சார பேனல்களை எதுவும் செய்ய வேண்டாம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT