திருவாரூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேற்று பருவகால பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக திரண்டிருந்த இளைஞர்கள் 
தமிழகம்

திருவாருர் | நெல் கொள்முதல் நிலைய தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த 2,000+ இளைஞர்கள்

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றுவதற்கான பருவகால பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. இதையொட்டி, முதல் நாளான நேற்று 2,000-க்கும் அதிகமான இளைஞர்கள், திருவாரூரில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் குவிந்தனர்.

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தற்காலிக அடிப்படையில், பருவகால பட்டியல் எழுத்தர் 152 பேர், நெல் கொள்முதல் நிலைய உதவியாளர் 147 பேர், பாதுகாவலர் 351 பேர் என மொத்தம் 650 பணியிடங்களுக்கு, முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 4) முதல் ஜூலை 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, திருவாரூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் முதல் நாளான நேற்று 2,000-க்கும் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பங்களுடன் திரண்டனர்.

பட்டியல் எழுத்தர் பணிக்கு இளங்கலை பட்டப் படிப்பு மற்றும் உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி, பாதுகாவலர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி என கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிஇ உட்பட தொழிற்கல்வி பயின்ற ஏராளமான பட்டதாரி இளைஞர்களும், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வந்திருந்தனர்.

இந்தப் பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் அவர்கள் பணியமர்த்தப்படவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் பணியாளர்கள் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT