தமிழகம்

தமிழகம் முழுவதும் கோயில்களில் தினமும் 1,500 பக்தர்கள் தமிழில் வழிபாடு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழில் வழிபாடு செய்வது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அன்னை தமிழில் வழிபாடு’ என்ற பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆக.5-ம் தேதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, 47 முதுநிலை கோயில்களில் அன்னை தமிழில் வழிபாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழில் வழிபாடு செய்ய ஏதுவாக சிவன், அம்மன், விநாயகர், முருகன், பெருமாள் உள்ளிட்ட 12 இறைவன் போற்றி நூல்கள் கடந்த ஆண்டு ஆக.12-ம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து கோயில்களிலும் புத்தக விற்பனை நிலையத்தில் இந்நூல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டணச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கான வழிபாட்டு கட்டணத்தில் 60 சதவீதம் அர்ச்சகருக்குப் பங்குத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தினமும் 150 பக்தர்கள், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 140, பழனி தண்டாயுதபணி சுவாமி கோயிலில் 200, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 180, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 54, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 66 பக்தர்கள் உட்பட இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் 1500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னை தமிழில் வழிபாடு செய்ய பதிவு செய்து வருகின்றனர்.

கோயில்களில் தமிழ் வழிபாடு சிறப்பாக நடைபெறுவதால் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் மனம் மகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT